விந்தையான விண்வெளி 6 th sense scientific: விண்வெளியில் சாதிக்கவே பிறந்தாயோ பெண்ணே !

விண்வெளியில் சாதிக்கவே பிறந்தாயோ பெண்ணே !

Posted by irsa






உலகே பரபரப்பாக ஒரு "திரில்'லை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அது... அமெரிக்காவின் "டிஸ்கவரி' விண்கலம் பத்திரமாகத் தரையிறங்குமா என்பதுதான். விண்கலத்தை பத்திரமாகத் தரையிறக்கி உலக மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றவர், விண்கலத்தை இயக்கிய பெண் கமாண்டர் இலீன் காலின்ஸ்.

கடந்த 2003ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட கொலம்பியா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பும் வேளையில், வெடித்துச் சிதறிய காட்சியை இன்னும் நம் கண்கள் மறக்கவில்லை. அதில் பயணம் மேற் கொண்ட இந்திய வீராங் கனை கல்பனா சாவ்லாவையும் யாரும் மறக்க முடியாது. விண்கலம் வெடித்துச் சிதறக் காரணம் என்ன? மீண்டும் விண்கலத்தை ஏவ முடியுமா? ஏவினாலும், பத்திரமாகத் தரையிறங்க முடியுமா? இத் தனை கேள்விகளுக்கும் விடை அளிப்பது போல், அனைவரின் பயத்தையும் உடைத்தெறிந்து சாதனை படைத்தவர் தான் இப்பெண் .


கொலம்பியா வெடித்துச் சிதறுவதற்கு முன், மேற்கொண்ட முதல் பயணத்தில் 1999ம் ஆண்டில் பயணம் செய்தவர் இலீன் காலின்ஸ். அது வெடித்துச் சிதறிய செய்தி கேட்டு அரண்டு போனாலும், உடனே சுதாரித்து, அடுத்த விண்கலத்தை ஏவும் பணியில் மனமுவந்து ஈடுபட் டார். கொலம்பியா பூமியிலிருந்து கிளம்பியபோது அதன் வெளிப்புறத்திலிருந்து ஒரு தகடு கீழே விழுந்தது. அப்போது அதை யாரும் பிரச்னையாகக் கருதவில்லை.


"டிஸ்கவரி' விண்கலம் ஜூலை 26ம் தேதி விண்ணிற்குச் செல்லக் கிளம்பியபோதும், கலத்தின் வெளிப்புறத் திலிருந்து தகடு ஒன்று கழன்று விழுந்தது. ஆனால் இந்த முறை விஞ்ஞானிகள் உஷாராகி விட்டனர். விண்கலத்தை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகப் பொருத்தப்பட்டுள்ள ஓடு விழுந் ததை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலம் சென்றதுமே அதைச் சரி செய்ய முடிவு செய்தனர். விண்கலத்தில் சென்று, பிரச்னைகளைச் சரி செய்து, சரியான வானிலை இல்லாத சூழ்நிலையில், தரையிறங்கும் சிக்கலை கவனமாகக் கையாண்டு, வெற்றிகரமாக பயணத்தை முடித்த பெருமையில் முக்கியத்துவம் பெரும் பங்கை ஆற்றியவர் இலீன் காலின்ஸ்.



இவை எல்லாம் எப்படி சாத்தியமாயிற்று, யார் இவர் என்று யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா? இனி காலின்சைப் பற்றிய விவரங்களைப் படியுங்கள்.

கடந்த 1956ம் ஆண்டு நியூயார்க் நகரில் எல்மிரா என்ற பகுதியில் நவம்பர் 19ம் தேதி பிறந்தார் இலீன் காலின்ஸ். விமானங்கள் கட்டுமானம், பராமரிப்பு என்று எப்போதும் சுறுசுறுப்பாய் இயங்கி வரும் பகுதி எல்மிரா. 1890ம் ஆண்டிலிருந்தே இதே தொழிலில் இப்பகுதி ஈடுபட்டு வந்துள்ளதால், காலின்சுக்குச் சிறு வயது முதலே விமானத்தில் பறக்க ஆசை பிறந்தது.

இவருக்கு 9 வயதானபோது, இவரது பெற்றோர் விவாகரத்தில் பிரிந்து விட்டனர். மனம் ஒடிந்தார் காலின்ஸ். போராடி வெற்றி காண்பதில் சிறு வயது முதலே பயிற்சி மேற்கொண்டார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் மேல்படிப்பு படிக்க பணம் இல்லை. 16 வயதில் வேலைக்குச் சேர்ந்தார். ஆயிரம் டாலர் சேர்த்தார். 1974ம் ஆண்டு நியூயார்க்கில் எல்மிரா அகடமியில் சேர்ந்து, கணித பாடத்தில் பட்டம் பெற்றார்.

கார்னிங் கம்யூனிட்டி காலேஜில் அறிவியல் கற்றுத் தேர்ந்தார். 1978ம் ஆண்டு சிராகுஸ் பல்கலை.,யில் சேர்ந்து கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற் றார். ஸ்டான்போர்டு பல்கலை.,யில் 1986ம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சியில் முதுகலை பட்டம் பெற்றார். விண்வெளி இயக்கம் மற்றும் நிர்வாகம் குறித்து வெப்ஸ்டர் பல்கலை.,யில் 1989ம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றார். இப்படி படிப்படியாக உயர்ந்தபடியே, "பைலட்' பயிற்சியும் மேற் கொண்டார். அதில் தான் இவர் வித்தியாசம் தனித்துவமாக மாறியது


படிப்பு: கடந்த 1979ம் ஆண்டு ஓக்லஹாமாவில் பைலட்டுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து விமானப் படை இளநிலை பைலட்டாகத் தேர்ச்சி பெற்றார். 1982ம் ஆண்டு வரை, அதே பயிற்சி மையத்தில் சிறு ரக விமானத்தின் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 1983 முதல் 85 வரை, கலிபோர்னியாவில் உள்ள டிராவிஸ் நிறுவனத்தில் அதிக இருக்கைகள் கொண்ட விமானத்திற்கான கமாண்டராகவும், விமான ஓட்டுநர் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். 1986ம் ஆண்டு வரை ஏர் போர்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பயிற்சி மேற் கொண்டார். 86 முதல் 89 வரை, கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப் படை அகடமியில் சேர்ந்து பணியாற்றினார். அங்கு கணக்குப் பாடத்திற் கான துணை விரிவுரையாளராகவும், டி41 விமானத்திற்கான விமான ஓட்டுனர் பயிற்சியாளராகவும் பணியற்றினார். கலிபோர்னியாவில், விமானப்படை ஓட்டுனர் பள்ளியில் விண்வெளி வீரர் பயிற்சி மேற் கொண்டார்.






1990ம் ஆண்டு வரை இங்கு பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான "நாசா'விற்கான விண்வெளி வீரர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

அதற்குக் காரணம் மொத்தம் 5000 மணி நேரம் , அதுவும் 30 ரகவிமானங்களில் பறந்த அனுபவம் உண்டு. அத்துடன் 419 மணி நேரம் விண்வெளி ஓடத்தில் தங்கி பறக்கும் முன்பயிற்சி பெற்றவர்.

இவர் கணவர் வர்த்தக பைலட் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பயிற்சியும், சாதனைகளும்: கடந்த 1991ம் ஆண்டு விண்வெளி வீரர் குழுவில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது அபார திறனால், மிக வேகமாக வளர்ந் தார். பூமியைச் சுற்றி வரும் விண்கலத்தை வடிவமைப்பதில் பயிற்சி பெற்றார். விண்வெளி வீரர்களைத் தயார் செய் யும் பணியில் ஈடுபட்டார்.

விண்கலத்தை இயக்கும் வல்லுனர் ஆனார். விண்கலத்தை பூமியிலிருந்து கிளப்புவது முதல், பிரச்னைகள் ஏற்பட்டால் திறம்படச் சமாளிப் பது வரை அனைத்தையும் கையாண் டார். "ஸ்பேஸ்கிராப்ட் கம்யூனிகேட்டராக'வும் பணியாற்றினார்.

நாசாவில் வேகமாக வளர்ந்து, விண்வெளி செல்லவும் தயாரானார். 1995ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ஏவப்பட்ட விண்கலத்தில் பைலட்டாகப் பயணித்தார். விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ரஷ்யாவின் "மிர்' நிலையத்திற்குச் சென்று வந்தார். விண்வெளிக்குப் பறந்த முதல் பெண் பைலட் இவர் என்ற பெருமை பெற்றார். அதனை அடுத்து, 1997ம் ஆண்டு மே 15ம்தேதி விண் ணுக்குச் சென்ற விண்கலத்திலும் பயணித்தார். அதன் பிறகு, 1999ம் ஆண்டு கொலம் பியா விண்ணுக்குச் சென்றது. அதில் விண்கலம் மற்றும் அதில் பயணிக்கும் குழுவின் ஒட்டுமொத்த கட்டுப் பாட்டையும் கையிலேந்திச் சென்று, வெற்றிகரமாக கொலம்பியாவைக் கீழிறக்கினார்.

ஒட்டுமொத்த கட்டுப் பாட்டை ஏற்ற முதல் பெண் விண்வெளி வீரர் என்ற சாதனையை இம்முறை நிகழ்த்தினார்.

இப்போது, ஏழு விண்வெளி வீரர்களை ஏந்திச் சென்ற டிஸ்கவரியையும் இயக்கி, குழுவிற்கும் தலைமை ஏற்று சாதனையைத் தொடர்கிறார்.

சொந்த வாழ்க்கை: இவ்வளவு "உயரே' பறக்கும் இவர் படிப்பு முழுதும் "ஸ்காலர்ஷிப்'பில் தான் நடந்தது. இவரது வாழ்க்கை குறித்து இவரே சொல்கிறார்: "சிறு வயதிலேயே விண் வெளி வீரர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். எல்லாருமே ஆண்களாகவே தானே உள்ளனர், ஏன் பெண் களே இல்லை என்று யோசிப்பேன். ஆனால், அதற்காக மனசெல்லாம் வருந்தியதில்லை.

என் அம்மா எங்களை விட்டுப் பிரிந்தது எனக்குப் பேரடியாக விழுந்தது. என் தந்தையும் வேலையை இழந்ததால், சாப்பாட்டுக்கே சிரமப்பட்டோம். திக்கித் திணறி பள்ளிப் படிப்பை முடித்தேன். ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள முயன்றேன். ஆனால், அங்கே ஏகப்பட்ட ஆசிரியர்கள் பயிற்சிக்காகக் காத்திருந்தனர். மனம் மாறி, பைலட்டாக பயிற்சி மேற்கொண்டேன். 19வது வயது தான் எனக்குத் திருப்புமுனை. அதன் பிறகு அனைத்துமே திட்டமிட்டபடி நடந்தன. 1974ம் ஆண்டு பெண் ராணுவ பைலட்டுகள் தேவை என்ற விளம்பரத்தை பேப்பரில் படித்தேன். சரியான நேரத்தில் சரியான சந்தர்ப்பம் அமைந்தது.

ஆனால், என் சக பைலட்டுகள் மனைவிகள் என்னிடம் தகராறு செய்தனர். பைலட் உடையில் நான் அவர்களுடன் வேலை செய் வதை அவர்களுடைய மனைவியர் விரும்பாமல், என்னை ராணுவத்திலிருந்து வெளியேற்றத் துடித்தனர். இதனால் எனக்கு நண்பர்கள் இழப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் வருத்தப்படவில்லை. என்னுடன் உண்மையாகப் பழகியவர்கள் மட்டும் இன்னும் நண்பர்களாகவே பழகியபோது மனதில் உறுதி பிறந்தது. மிக நேர்மையாக, வெளிப்படையாக இருக்க முடிவு செய்தேன். யாருடனும் அனாவசியமாக ஊர் சுற்றுவதில்லை என்பதை மிக நேர்மையாகத் தெளிவுபடுத்தினேன். இறுதியில் என்னைச் சந்தேகித்தவர்களே என்னுடன் நண்பிகளாகப் பழகத் துவங்கினர்.

கலிபோர்னியாவில் சரக்கு விமான ஓட்டுநராக இருந்தபோது 1983ம் ஆண்ட பேட் யங் என்ற பைலட்டைச் சந்தித்தேன். இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இப் போது எனக்கு இரண்டு குழந்தைகள்.

முதன்முதலில் விண்ணுக்குப் பறந்தபோது என் முதல் குழந்தை நான் நிலவுக்குச் செல்கிறேன் என்று நினைத்தாள். அவள் வளர வளர அவளுக்கு எல்லாவற் றையும் புரிய வைத் தேன். இன்னும் கூட சில குழந்தைகள் "விண் வெளியில் கடவுளைப் பார்க்கிறீர்களா?' என்று கேட்கின்றனர். அவர்களுக்கும் எளிமையான முறையில் விவரங்களை எடுத்துச் சொல்கிறேன்.


எப்படி இந்த அசாத்திய திறமை சாத்தியமானது? "பயிற்சி... பயிற்சி... பயிற்சி தான்! நாம் செய்யும் வேலை குறித்து 100 சதவீதம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். நம்பிக்கையுடன் வேலை செய்ய இது மிக மிக அவசியம். விண்வெளி ஆராய்ச்சி, விண்கலத்தில் பயணிப்பது போன்ற வேலைகளில், ஒரே ஒரு துளி சந்தேகம் இருந்தால் கூட, நாம் அந்தப் பணியைத் தொடக் கூடாது. மீறித் தொட்டு விட்டால், அடுத்த நொடி மரணத்தைத் தழுவ வேண்டியது தான். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை முற்றிலுமாக உணர்ந்தவராக இருப்பது தான் என் வேலைக்கான சவால். இதற்கு கடுமையான பயிற்சி முக்கியம். சிறு வயது முதலே போராட் டத்தை வெற்றி கொள் ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொண்டேன். விண் வெளி பயணத்தில் வீரர்கள் அணியும் உடையே கவசம் போன்றது. அதில் தான் நாங்கள் இயக் கும் கருவிகளும் அதற் கான உபகரணங்களும் இருக்கும். விண் வெளி ஓடம் புறப்படும் போது ஏற்படும் சத்தம், மற்றும் ஒளி , அதற்குப்பின் புவிஈர்ப்பை விட்டு முற்றிலும் புதிதாக நாங்கள் ஆற்றும் பணிகள் ஆகியவை எல்லாமே சவால் நிறைந்தவை. இப்படி விவரிக்கும் காலின்சின் வாங்கிய பரிசுகளும், சான்றிதழ்களும் ஏராளம்.

விருதுகள்:
"டிபென்ஸ் சுப்பீரியர் சர்வீஸ் மெடல்:' அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் ராணுவத்தில், முக்கியப் பொறுப்பில் திறம்படச் செயலாற்றுவோருக்கான விருது. மூத்த அதிகாரிகளுக்கும், மேலதிகாரிகளுக்கும் வழங்கப்படும் விருது இது.

"டிஸ்டிங்விஷ்டு பிளையிங் கிராஸ்:' அமெரிக்க ஆயுதப் படைக்கு உதவியாக விமானத்திலிருந்து தாக்குதல் நடத்துவோருக்கு வழங்கப்படும் விருது. ஹீரோ போன்று அசாதாரண முறையில் சிறப்பாகச் செயலாற்றிய வகையில் காலின்சுக்கு இந்த விருது வழங்கப் பட்டது.

"டிபென்ஸ் மெரிடோரியல் சர்வீஸ் மெடல்:' அமெரிக்க ராணுவத்தில் மிக உயரிய விருதுகளில் மூன்றாவதாக வழங்கப்படும் விருது இது.

"கமாண்டேஷன் மெடல்:' ராணுவப் பணியில் ஈடுபடும்போது எதிரிகளை நேரடியாகத் தாக்கி வெற்றி கொள்வோருக்காக வழங்கப்படும் இடைநிலை விருது இது.

"ஆர்ம்டு போர்சஸ் எக்ஸ்பெடிஷனரி மெடல்:' அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியால் தோற்றுவிக்கப் பட்ட விருது இது. ராணுவத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றும் சிலருக்கென ஒதுக்கப்படும் விசேஷப் பணியிலும் சிறப்பாகப் பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட விருது.

"லெஜன் ஆப் ஆனர்:' வீரதீரச் செயலுக்காக பிரான்ஸ் நாடு வழங்கிய விருது.



காலின்ஸ் பெயரில் சர்வதேச விமான நிலைய நுழைவாயில்: இத்தனை விருதுகள் வாங்கியவரின் பெயரில் இப்போது ஒரு விமான தளமும் இயங்குகிறது. சிராகுஸ் ஹான்கான் சர்வதேச விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில், காலின்ஸ் பெயரில் நிறுவப்பட்டுள்ளது.

இத்தகைய பெருமைகளைப் பெற்ற காலின்சின் சாகசத்தை விண்வெளி ஆராய்ச்சி வல்லுனர்களே வாய் ஓயாமல் பாராட்டுகின்றனர். நாமும் சேர்ந்து பாராட்டுவோம்!

0 comments: