விந்தையான விண்வெளி 6 th sense scientific: புவி வெப்பத்தால் புயலின் வேகம் அதிகமாகிறது

புவி வெப்பத்தால் புயலின் வேகம் அதிகமாகிறது

Posted by irsa


புவி வெப்பம் அடைவதால் ஏற்படும் மாற்றங்களை உலகம் உணரத் தொடங்கிவிட்டது. அதில் ஒன்றுதான் சூறாவளிக் காற்று அசுர வேகத்தைப் பெறுவது.

புவி வெப்பம் அடைவதால் கடலிலும் வெப்பம் அதிகரிக்கிறது. அப்படி அதிகரிக்கும் வெப்பமானது, பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல்பரப்பில் அதி வேகம் கொண்ட புயலை உருவாக்குகிறது. அதனால்தான் சமீபத்திய காலங்களில் புயல், சூறாவளி ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களை அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளால்கூடத் தாங்க முடியாமல் போகிறது.

இதுவரை இருந்திராத வகையில், புயல் சீற்றத்தின்போது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு வருகிறது. ஒருவாரத்தில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாள்களிலேயே கொட்டித் தீர்த்துவிடுகிறது.

ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும்கூட ஆறுகள் தங்களுடைய நிலையை விட்டுப் பிறழ்ந்து ஊருக்குள் பாயத் தொடங்கிவிட்டனவோ என்று அஞ்சும் வண்ணம் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. சீனா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் இதே நிலைமைதான்.

இயற்கையை மனிதன் சீரழிப்பதால் புவி வெப்பம் அடைகிறது. அப்படி அதிகரிக்கும் வெப்பம் பூமத்திய ரேகையை ஒட்டிய நாடுகளின் வெப்பத்தில் அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது. அங்கெல்லாம் வழக்கத்தைவிட ஒரு டிகிரி செல்சியஸ் கூடுதலாகவே வெப்பம் நிலவ ஆரம்பித்திருக்கிறது. இதனால் கடலில் உருவாகும் புயல் வேகம் பெறுகிறது. அந்த வேகம் அது கரையைக் கடக்கும்போது தெரிகிறது.

துருவப் பகுதியில் பெரும் ஐஸ் கட்டியாக இருந்த நிலப்பரப்பு இப்போது உடைந்து உருகி, ஆங்கே பெரிய கப்பல்கள் கூட பயணிக்கும் அளவுக்கு நீரில் பெரிய பாதை ஏற்பட்டுவிட்டதாக சமீபத்திய செய்திகளும் செயற்கைக் கோள்கள் எடுக்கும் புகைப்படங்களும் தெரிவிக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளாக ஏற்பட்ட புயல்களின் எண்ணிக்கையை ஆராய்ந்ததில், புவி வெப்பமடைவதால் புயல்களின் எண்ணிக்கை கூடவில்லை என்ற தகவலும் அதே சமயம் அவற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே வருவதும் தெரியவருகிறது.

0 comments: